அ - வரிசை அதிமதுரம்

 



அதிமதுரம் – ATI MATHURAM

வேறு பெயர் –அதிங்கம், அட்டி, மதூகம், குன்றிவேர்

Abrus Precatorious

Glycyrrhizae Radix

English – Jequirity: Indian or Jamaica Liquorice

Telungku – Ati-madhuram, Malayalam – Ati-madhram, Kanadam – Ati-mathura, Sanskirit -- Yeshti – maghukam

இது மலைகளில் பயிராகும் குன்றியின் வேர். இது சிறிதும் பெரிதுமாய் மஞ்சள் நிரமுள்ளதாய் வெளிப்புறத்தில் அழுக்குள்ளதாய் இருக்கும். பெரும் பாலும் வெண்குன்றியின் வேராகும், இதன் விதைகள் கருநிற – வெண்ணிற, செந்நிற பேதங்களை உடையது. இதற்குப் பதிலாக மற்றகுன்றிகளின் வேர்களையும் உபயோகிப்பதுண்டு.

மருத்துவ உபயோகப்பகுதி – இலை, வேர், பால், விதை.

இலை – சுவை – இனிப்பு, கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.

வேர் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு.

விதை – சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.

பால் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு,

பொதுச் செயல்

வரட்சியகற்றி – Emollient

உள்ளழாற்றி – Demulcent

கோழையகற்றி – Expectorant

மலமிளக்கி – Laxtive   

குணம் – வேருக்கும் பாலுக்கும் ஒரே குணம் உண்டு. இதனால் திரிதோடப்புண் தாகம் கண்நோய் உன்மாதம். காமியநோய், கிரிச்சரம், ஆவர்த்த பித்தம், மத மூர்ச்சை, விடபாகம், வெப்பு, வாதசோணிதம், காமாலை சர்வவிடம், தாதுநட்டம், சோபரோகம், இதழ் நோய், ஆசியநோய், குத்திரும்மல், குய்யப்புண், சிரநோய், வாயுநோய் முலை, வித்திரிதி, வெட்டுக்காயப் புண் முதலியன போம். ஆனால் நீர்க்குண்டிக் காய்க்கும் ( kidney) மண்ணீரலுக்கும் ( Liver ) ஆகா.

அதிமதுரத்தின் குணம்

கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங்

கண்ணோய்உன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம்

பித்தம்எலும புருக்கி கிரிச்சரம் ஆவர்த்த

பித்த மதமூர்ச்சை விடபாகம் வெப்பந்

தத்திவரு வாதசோ ணிதங்கா மாலை

சருவவிடங் காமியநோய் தாது நட்டம்

குத்திருமல் ஆசியங்கம் இதழ்நோய் இந்து

குய்யப்புணும் மதூகமெனக் கூறுங் காலே

தேரையர் குணவாகடம்

தித்திக்கு மதிமதுரக் குணத்தைஎடுத் துரைக்கில்

சிரமயக்கஞ் சுரதாகந்த் திரிதோடங்கள்

பித்தஞ்சத் திக்குமிது குணமா மதுரதீபனமாந்

தாதுவுட்டி ணமுந் தவிர்க்கும் விழிக்கிதமாம்

புத்திக்கு வித்தாகுஞ் சந்தாபந் தீர்க்கும்

புகைந்தெடுக்குஞ் சேட்டுமத்தைப் பித்தரோகத்தை

அத்திப்பற் றினமேகந் தன்னைவா தத்தினை

யறுத்திடும்வச் சிரமென்பா ரதிமதுரந்தனையே

--- ஏடு

அதிமதுரம் பெரீந்துக் காணகுணங் கேளீர்

கொதிமருவாப் பித்தங் குறுகுமே – துதிமருவாய்

நீர்துவு முண்டாகும் நிலையாத் தாபம்போம்

பாரறியச் சொன்னோம் பகர்ந்து

                          ----- ஏடு  

அதிமதுரச்சத்து செய்யும் முறை –

அதிமதுரம் 350 gm இதில் 1500 lit நீர் விட்டு இதை 8 – 12 மணி நேரம் ஊறவைத்து இறுத்து வடிகட்டி திப்பியை நீக்கி நீரை எடுத்துக் கொள்ளவும் பின் நீக்கிய திப்பியில் மீண்டும் 250 ml வெண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்து இருத்து முதலில் உள்ள நீருடன் சேர்த்து எடுத்துக் கொண்டு நெருப்பில் வைத்து மெழுகு பதமாக சுண்டவைத்து எடுத்து வெய்யிலில் வைத்து நீர் சுண்ட எடுத்துக் கொள்ளவும்

அளவு ½ - 1 gm

மருத்துவகுணம்

இதன் சத்தை மூசாம்பரம், நிலவாகை இவைகளைக் கொண்டு செய்கிற மருந்துகளின் அருவருப்பை நீக்க உபயோகிக்கலாம்.

வேர்

மருத்துவகுணம் – தேக அனல் தணிய அதிமதுரம் 15 – 20 gm கொதிக்கும் வெந்நீரில் போட்டு கலக்கி காலையில் வடிகட்டி காலை மாலை கொடுக்கலாம்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

அதிமதுரம், கடுக்காய், மிளகு சமனெடை இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து கலந்து 1 – 2 gm தேனில் கொடுக்கலாம்.

மஞ்சள் காமாலைக்கு

அதிமதுரம், முட்சங்கன் வேர்ப்பட்டை இவ்விரண்டையும் சமனெடை எடுத்துப் பழச் சாற்றால் மூன்று நாள் அரைத்து தேத்தாங் கொட்டைப் பிரமாணம் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக்கொண்டு இதைப் பாலிலாயினும் முலைப்பாலிலாயினும் ஒரு நாளைக்கு இரு தடவை கொடுக்கலாம்.

கர்ப்பவதிகளுக்கு காணும் இரத்தம் நிற்க

அதிமதுரம், சீரகம், வகைக்கு 8 gm இவகைகளை இடித்து 250 ml நீர் விட்டு 100 ml ஆகச் சுண்ட வைத்து காலை மாலை 3 – 4 நாள் கொடுக்கலாம்.

பேதியாக – அதிமதுரம் 100 gm, திராட்சை உப்பு 15 gm 500 ml நீரில் சேர்த்து 50 ml  ஆகக் கொடுக்கலாம்

கண் ஒளிபெற

அதிமதுரத்தை தாய்ப்பால் விட்டரைத்து கண்ணில் விடலாம்.

இலை

மருத்துவகுணம்

இதன் இலையை அரைத்துப் பூசிவர உடலிலும் அக்குளில் உண்டாகும் துர்வாசனை, அக்குளில் உண்டாகும் சொறி சிரங்கு போகும்

பிடிப்பு, சுளுக்கு களுக்கு

அவ்விடங்களில் சிற்றாமணக்கு நெய் தடவி குன்றி இலையை ஒட்டவைக்க குணமுண்டாகும் அப்போது ஓர் வித விறுவிறுப்பை உண்டாக்கி வலி நீங்கும்.

  அதிமதுர லேகியம்.

அதிமதுரம் 50 gm  பொடி எடுத்து பசும் பால் 500ml நெய் 250 gm நாட்டு சர்க்கரை 250 gm இவைகளை முறைப்படி லேகியமாகச் செய்து கொட்டைப் பாக்களவு தினம் இரு வேளை கொடுத்துவர மூத்திர கிரிச்சரம், பிரமியம் போகும்.

அதிமதுர சூரணம்

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 100 gm கொடிவேலி வேர் பட்டை சூரணம் 50 gm  கலந்து வைத்துக் கொண்டு சித்திரை முதல் ஆடி மாதம் வரை சாப்பிட்டுவர தீராத தலைவலி, சுரம் தீரும் கண்கள் ஒளி பெறும்

வறட்சி, தோடம் ஏழும் தீர

அதிமதுரம் 35 gm  ஈயச் செந்தூரம் 5 gm தேன் விட்டரைத்து கொம்புச் சிமிளில் வைத்துக் கொண்டு சிறிது நாக்கில் தடவி வர மேற்கண்ட தோஷங்கள் தீரும்.

இருமலுக்கு

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டு சுவைத்து சாறை விழுங்க இருமல் குறையும்     

Comments

Popular posts from this blog

அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

அ - வரிசை அகத்திக்கீரை

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை