அ -- வரிசை அத்தி


 



த்தி –
Atti

வேறுபெயர் – அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம்.

Ficus Glomerata, Roxb.

Or

(Ficus Racemosa, wall)

English – country fig

Telungku – Atti, Malayalayam – Atti, Kanadam –Atti, Sanskirit – Udumbara

இது மரவகுப்பைச் சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் பயிராகின்றது. மரத்தின் மேற்பட்டை வெளுத்தும், பிளவுபட்டும், சுரசுரப்பாய் இருக்கும்.

அடி மரமுதல் உச்சிக் கிளைகள் மட்டும் மரத்தை ஒட்டிக் காய்காய்க்கும். இதன் பூவைக் காண்பது மிக அரிது. இதனாலேயே நீண்ட காலஞ் சென்று கானப்பட்ட நண்பனை நோக்கி அடேயப்பா உன்னை அத்தி பூத்தது போலக் கண்டேன் என்று கூறும் வழக்கிருக்கிறது. இதன் காய் உருண்டையாயும் பச்சை நிறமாயும் வழுவழுப்பாயும் மேல் பாகம் மினுமினுப்புடன் பட்டுப் போன்ற மெல்லிய சுனையுடன் இருக்கும். மேலும் காயின் அடிப்புறத்தில் சிறிது குவிந்து மத்தியில் ஒரு சிறு துவாரமும் அதைச் சுற்றி செந்நிறக் கோடுகள் இருக்கும். பழுத்தவுடன் செங்கல் நிறமாக மாறும் அதனுள் சிறு விதைகளும் பூச்சிகளும் அடங்கி இருக்கும். தென்னிந்தியாவில் இதன் பிஞ்சையும்,காயையும் அவித்து உண்பது வழக்கம். மருந்து உண்ணுங்காலங்களில் இதைப் பத்திய பதார்த்தமாக உபயோகிப்பதுமுண்டு.

மருத்துவ உபயோகப்பகுதி – பிஞ்சு, காய், பழம், பால், பட்டை, மது.  

பிஞ்சு

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

துவர்ப்பி – Astringent

குணம் – துவர்ப்புடைய அத்திப் பிஞ்சு மூலவாயு,மூலகிராணி,இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு ஆகியைவைகளை போக்கும்.

மூலக்கி ராணியறும் மூலவிரத் தந்தீரும்

சாலக் கடுப்புந் தரிக்கும்மோ ! – மாலரவத்

துத்திப் படவல்குற் றேகாய் ! துவர்ப்பையுறும்

ஆத்திச் சிருபிஞ்ச ருந்து

---- அகத்தியர்குணவாகடம்

மருத்துவகுணம்

இதை சமைத்து உண்ண மேற்கண்ட பிணிகளை போக்கும்.

கீழ்கண்டபடி கஷாயம் செய்து உட்கொள்ள வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

ஆணைக் கன்றி லொருபிடியு மரையன் விரோதி யிளம்பிஞ்சும்

கானக் குதிரைப் புறத்தோலுங் காலிற் பொடியை மாற்றினதும்

தானைக் கொன்றான் சாறிட்டுத் தயவா யரைத்து கொள்வீரேல்

மானைப் பொருதும் விழியாளே ! வடுகுந் தமிழுங் குணமாமே

--- தேரையர் வாகடம்

( அத்திபிஞ்சு, கோவைபிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை, வாழைப்பூ சாறு, வயிற்றுக் கடுப்பு நீங்கும் )

காய்

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

துவர்ப்பி – Astringent

குணம்

பிரமேகம், வாதநோய், சூலை, சரீரவெப்பு, புண் ஆகிய இவைகள் போம் மலங்கழியும்.

அத்திக்காய் தன்னை அருந்தினால் ஆரணங்கே !

எத்திக்கும் மேகம் இருப்பதுண்டோ ? – சத்திக்கும்

வாதம் அகலும் மலங்கழியும் சூலையொடு

மீதனலும் புண்ணும்போம் விள்

----- அகத்தியர்குணவாகடம்

மருத்துவகுணம் – இதையும் பிஞ்சைப் போல் சமைத்துண்ண மேற்கண்ட நோய்கள் தீரும் மலங்கழியும்

பழம்

சுவை இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு

செயல்

குருதியுண்டாக்கி – Cordial ( Improves blood )

மலமிளக்கி -- Laxative

குணம்

இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.மலத்தைக் கழிக்கும்

பழத்தை மணப்பாகு செய்து அல்லது உலர்த்திச் சூரணம் செய்து உட்கொள்ள மலபந்தம், நீரில் உள்ள சக்கரை, நாவரட்ச்சி, உடல் வெதும்பல் இவைகள் நீங்கும்.இரத்த விருத்தியாகும்.

பால்

சுவை - துவர்ப்பு, சிறு இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

துவர்ப்பி – Astringent

குணம் – பித்தகோபம், நீரழிவு, சூலை இரத்த மூத்திரம், ஆகியவைகள் போக்கும்.

காரமோ டுட்டினமாங் காதுகின்ற பித்தத்தை

நீரிழிவைச் சூலைகளை நீடிரத்தஞ் – சேருங்

கிரிச்சரத்தைப் போக்குங் கிளர்கோளி யென்னும்

மரச்சருமப் பாலதனை வாங்கு.

----- அகத்தியர் குணவாகடம்

மேலும் இரத்தபேதி,பெரும்பாடு,வெள்ளை,மதுமேகம்,தாதுக் குறைபாடு இவைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.

மருத்துவகுணம் – வெண்ணெய் அல்லது சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்க மேல் குறிப்பிட்ட நோயிகள் சாந்தமடையும்.

மதுமேகத்தால் உண்டான பிளவை, கீல்வாதம், மூட்டுவீக்கம் இவைகளுக்கும் இப்பாலை பத்து போட நாளுக்கு நாள் நன்மைதரும்.

பட்டை

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

துவர்ப்பி – Astringent

குணம்

ஆசனக்கடுப்பு உதிரப்போக்கு சீத இரத்தபேதி நாற்றமுள்ள புண்கள் பிரமேகம், ஆகியவைகளைப் போக்கும்.

வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு

நாறுவிர ணங்களெலாம் நாடாவாம் – கூறுங்கால்

அத்திதரு மேகம்போம் ஆயிழையே ! எஞ்ஞான்றும்

அத்திப்பாற் பட்டைக் கறி

----- அகத்தியர் குணவாகடம்.

மருத்துவகுணம் – அத்திப்பட்டை குடிநீர்

பட்டையை விதிப்படிக் குடிநீர் செய்து கொடுத்துக் கொண்டுவர ஆசனக் கடுப்பு, முதலிய மேற்கண்ட நோய்கள் விலகும். இதைக் கொண்டு கழுவிவர நாற்றமுள்ள புண்கள் ஆறிப்போகும்

பிழிந்து இரசத்தில் தினம் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை 30 -- 50 ml நாள்தோறும் கொடுக்க பெரும்பாடு நிற்கும்.

மது

சுவை – இலேசான இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

உடல் தேற்றி – Alterative

குணம்

மரவேரிலிருந்து இறங்கும் கள்ளில் சீனியேனும் பேயன்வாழை பழம் கலந்து நாள் தோறும் காலையில் சபிட்டுவர அஸ்த்தி மேகம், உட்சூடு, பித்த மயக்கம், முதலியவைகள் தணியும்

அத்திமே கஞ்சூ டதிமயக்கந் தாகமும்போம்

சீனியேனும்பேயன் செங்கனியே னுங்கலந்தே

பானுவுத யங்குடித்துப் பார்

---- அகத்தியர் குணவாகடம்

Comments

Popular posts from this blog

அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

அ - வரிசை அகத்திக்கீரை

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை